காரணம் (The Reason)

ஒருவர் ஏன் இப்படி செய்தார்? அல்லது நான் ஏன் இவ்வாறு நடக்க நேரிட்டது ? என்பதற்கு ஒருவர் அல்லது நாம் சொல்லும் விளக்கத்தை 'காரணம்' என்கின்றோம். இன்றைய சூழ்நிலையில் காரணம் என்பது மற்றவரை ஏமாற்ற சொல்லப்படும் ஒரு 'சாக்கு' என்றுதான் பொதுவான ஒரு கருத்து நிலவுகிறது. சில சமயங்களில் இக்கருத்து உண்மை என்றாலும், பல நேரங்களில் இந்த மன்பன்மைதான் பிரச்சனைகளுக்கு அடித்தளம் போடுகிறது. ஒருவர் செய்த செயல் நமக்கு வருததையோ அல்லது ஏமாற்றத்தையோ அளிக்கும்போது, அவர் நம்மிடம் அதற்கான காரணத்தை விளக்கும்போது, நம்மில் பெரும்பாலோனோர் அவர் ஏதோ சாக்கு சொல்லி நம்மை நம்பவைக்கப் பார்கிறார் என்று அதை காதுகொடுதுக்கூட கேட்பதில்லை. "ஆயிரம்தான் ஆனாலும், அவன் எப்படி இப்படி நடந்துகொள்ளலாம் ? " என்று அவர் மீது கோபப்படுகிறோம். உண்மையான காரணத்தை அறிய அடுத்தவரை புரிந்துகொள்ள முயலவேண்டும். ஆனால் அடுத்தவரைப் புரிந்து கொள்வது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. உண்மையாக ஒருவரைப் புரிந்து கொள்ள அவருடைய நிலைமையில் தன்னை இருத்திப் பார்க்க வேண்டும். நேர்மையாக அப்படி இருத்திப் பார்த்தால் மட்டுமே அந்தந்த நிலைமையின் சங்கடங்கள், சிக்கல்கள், சந்திக்க வேண்டியிருக்கும் பிரச்னைகளின் தன்மை எல்லாம் விளங்கும்.

பிரபல டைரக்டர் மிருணாள் சென்னின் பழைய திரைப்படமான “ஏக் தின் பிரதி தின்” (ஒரு நாள்-தினம் தினம்) ஒரு சாதாரண நிகழ்வை மிக அழகாக சித்தரிக்கும் திரைப்படம்.

கல்கத்தா நகரத்தில் வேலைக்குச் சென்ற ஒரு பெண் இரவு வெகு நேரமாகியும் வீட்டுக்குத் திரும்பவில்லை. அவள் தான் அந்த வீட்டில் சம்பாதிக்கும் ஒரே நபர். அவள் திரும்பி வராமல் கடிகாரம் நகர நகர குடும்பத்தினர் அனைவரும் கலவரம் அடைய ஆரம்பிக்கிறார்கள். அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, தங்கை என ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் பயப்படுகிறார்கள். இவர்களோடு அக்கம்பக்கத்தினரும் சேர்ந்து கொள்கிறார்கள். நிமிடத்திற்கு நிமிடம் பயமும், குழப்பமும் அதிகரிக்க ஆரம்பிக்கிறது. அண்ணன் சவக்கிடங்கு வரை கூட போய் பார்த்து விட்டு வருகிறான். பதட்டம் அதிகமாகி வீட்டில் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்கிறார்கள்.

கடைசியில் அந்தப் பெண் நள்ளிரவில் வீடு திரும்புகிறாள். அவளைப் பார்த்ததும் நிம்மதி அடைந்த குடும்பத்தினர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகத் தங்கள் கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் அந்தப் பெண்ணிடம் யாரும் ”என்ன ஆயிற்று, ஏன் தாமதமாக வந்தாய்?” என்று கேட்கவில்லை. அவளே கேட்கிறாள். “ஏன் நான் தாமதமாய் வந்தேன் என்று அறிந்து கொள்வதில் உங்களில் யாருக்குமே அக்கறையில்லையா?”

அந்த கேள்விக்கு அந்தத் திரைப்படத்தில் கடைசி வரை பதில் சொல்லப் படுவதேயில்லை. அந்தத் திரைப்படத்தில் அவள் வராவிட்டால் தங்கள் நிலை என்ன என்ற சுயநலம் கலந்த பயமும், ஆதங்கமும் குடும்பத்தினரிடம் காட்டப்படுகிறது. அவள் வந்து விட்டாள் என்றான பின் அனைவரும் பாதுகாப்பை உணர்கிறார்கள். அத்தோடு அந்த நிகழ்வு மறக்கப்பட்டு விடுகிறது. மறு நாள் காலை எழுந்து அனைவரும் தங்கள் தினசரி வாழ்க்கையைத் தொடர்கிறார்கள். ஏக் தின் பிரதி தின் - ஒரு நாள் தினம் தினம்..........

இந்த திரைப்படத்தைக் காண்பவர்களை மிகவும் யோசிக்க வைத்த விஷயம் ஏன் அவள் தாமதமாக வந்தாள் என்பதை அறிந்து கொள்வதில் அந்தக் குடும்பத்தினர் யாருக்குமே உண்மையான அக்கறை இல்லாதது தான். அந்த திரைப்படத்தில் அந்தக் குடும்பத்தினர் சுயநலமிகள் என்பது போல சித்தரிக்கப்பட்டிருந்ததால் அப்படி அவர்கள் நடந்து கொண்டார்கள் என்பதாகத் தோன்றினாலும் இந்த பண்பு சுயநலமிகளாக அல்லாத குடும்பங்களில் கூட அதிகமாய் பார்க்க முடிகிறது

குடும்பத்திலும் சரி, அலுவலகத்திலும் சரி, ஒரு மனிதர் திடீர் என்று வித்தியாசமாக நடந்து கொண்டால் விமரிசனம் எழுகிற அளவுக்கு, ஏன் அப்படி நடந்து கொண்டார் என்ற காரணம் அறிய முற்படுகிற எண்ணம் பெரும்பாலும் எழுவதில்லை. யா ருமே காரணம் இல்லாமல் வித்தியாசமாக நடந்து கொள்வதில்லை என்ற அடிப்படை புரிதல் பெரும்பாலும் இருப்பதில்லை. ஏனோ அப்படி நடந்து கொள்கிறார் என்ற அலட்சியமோ, வேண்டுமென்றே அப்படி நடந்து கொள்கிறார் என்கிற அபிப்பிராயமோ பிரதானமாக மற்றவர் மனதில் எழுகிறதைத் தான் எல்லா இடங்களிலும் அதிகமாகப் பார்க்க முடிகிறது.

தங்களுடைய எதிர்பார்ப்பின் படியெல்லாம் ஒருவர் நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிற மனிதர்கள் அவர் அப்படி நடந்து கொள்ளா விட்டால் அதற்கு உண்மையில் சரியான காரணங்கள் ஏதாவது இருக்கக் கூடுமா என்கிற ஒரு நியாயமான கேள்வியைக் கேட்டுக் கொள்ள பெரும்பாலும் தவறி விடுகிறார்கள். முதலில் சொன்னது போல அவருடைய நிலையில் தன்னை இருத்திப் பார்க்கும் சிரமத்தையும் யாரும் எடுத்துக் கொள்வது அபூர்வமாகவே இருக்கிறது. பெரும்பாலும் அந்த அலட்சியத்தாலேயே நியாயமற்ற விமரிசனங்கள் மடை திறந்த வெள்ளம் போல் கிளம்புகின்றன. இந்த அளவு மோசமாக இல்லாவிட்டாலும் நம்மில் பலரும் அறியாமையால் சிறிய அளவிலாவது இந்த தவறைச் செய்கிறோம்.
- நன்றி: www . enganeshan.blogspot . com

<< கரும்பலகை  Contact blogger  Font Help