ஆங்கிலம் - மொழி ? கலாச்சாரம் ?

""ஆங்கிலத்தை ஆங்கிலேயர்கள் போலப் பேச வேண்டும்'' என்ற எண்ணமே மொழி பற்றிய சிறுபிள்ளைத்தனமான பேதமை. "தமிழைத் தமிழ் போலப் பேசுகிறோமா?' என்று இவர்களில் பலர் ஏன் சிந்திப்பதே இல்லை?

மொழி குறித்த ஒரு பரந்த பார்வையும், தனது தனித்தன்மை குறித்த ஒரு கம்பீரமும் அற்றுப் போனவர்களே, இப்படி ஓர் அன்னிய மொழியை அன்னியன் போலவே பேசுவதற்கு ஆலாய்ப் பறக்கிறார்கள்.

""சூரியன் மறையாத பிரிட்டிஷ் சாம்ராஜ்யம்'' என்று பெருமையடித்துக் கொண்ட ஆங்கிலேயர்கள், பல்வேறு நாடுகளில், தங்களது ஆட்சிக் கொடியை நாட்டினார்கள். அந்தப் பகுதிகளில் தங்கள் நிர்வாகத்தை நடத்துவதற்கு உதவியாக, அந்தந்தப் பகுதி மக்களுக்கு ஆங்கில போதனா முறையைப் புகுத்தினார்கள்.

எனவே ஒவ்வொரு பிரதேசத்து ஆங்கில உச்சரிப்பும், அந்தக் குறிப்பிட்ட மக்களின் தாய்மொழி எதுவோ அதன் மணமும், உச்சரிப்பு மரபும் கலந்தேதான் இருக்கும்.

ஆனால் நமது ஆங்கில மோகத்தில் அதன் உச்சரிப்பைப் பொதுமைப்படுத்தத் துடிக்கிறோம். எந்த ஒரு மொழியையும் அதன் உலகளாவிய வளர்ச்சியால், தேவை கருதி நாம் கற்க வேண்டியது அவசியம்தான். ஆனால் அதைப் பயன்படுத்தும்போது எந்தவிதத் தாழ்வுணர்ச்சிக்கும் ஆளாக வேண்டிய அவசியமில்லை.

இந்தத் துடிப்பைத் தமிழைச் சரியாக உச்சரிப்பதில் காட்டுகிறோமா? தொலைக்காட்சித் தொகுப்பாளினிகளின் தமிழ் என்பதே ஒரு தனி ""மொலி''யாகத் திரிந்து "ள' கர "ல' கர, "ண' கர, "ன' கர வேறுபாடுகளைப் பொருள்படுத்தாமல் கடந்து ஓடிக் கொண்டிருக்கிறதே, கவலைப்படுகிறோமா நாம்?

சரி, மக்கள் பேசும் தமிழுக்கே வருவோம். நெல்லைத் தமிழ், கொங்குத் தமிழ், மதுரைத் தமிழ், தஞ்சைத் தமிழ் என்று பேச்சுவழக்கில், சொற்களின் பிரயோகத்தில், உச்சரிப்பில், பொருளில் மாறுபடுகிறதே இதை நாம் ரசிக்கவில்லையா என்ன! ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் அழகானவை.

சில பழமொழிகளும் கூட அந்தந்த மண்ணின் தன்மைக்கு ஏற்பத்தான் வரும். ""நண்டு கொழுத்தால் வளையில் இருக்காது தண்டு கொழுத்தால் தரையில் இருக்காது'' என்ற பழமொழி நீர்வளமும், நிலவளமும் மிகுந்த தஞ்சைத் தரணியிலிருந்து உருவாகுமே தவிர, வறண்டு போன ராமநாதபுரம் சீமையிலிருந்து வராது.

மக்களின் வாழ்வியலும், வாழிடத்தின் சூழலும் சேர்ந்துதான் அவர்கள் கையாளும் மொழியைத் தீர்மானிக்கின்றன. இது குறித்த தாழ்வுணர்ச்சியோ, அருவறுப்போ கொள்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.

இந்நிலையில் எங்கோ தொலைதூரத்திலிருந்து வந்து இறங்கிய அன்னிய நாட்டவன், அவனுடைய மொழியை இங்கே அறிமுகம் செய்கிறான்.

அதை ஏதோ ஒரு தேவை கருதி நாமும் கற்கிறோம். அவற்றை நம்முடைய எழுத்திலோ பேச்சிலோ வெளிப்படுத்தும்போது நமது மொழியின் மணமும் மரபும் கலந்துதானே இருக்கும் இதைச் சொல்ல நாம் ஏன் வெட்கப்பட வேண்டும்? இன்னும் சொல்லப்போனால் ஆங்கிலமே உலகின் பல்வேறு மொழிகளின் சொல் வளங்களைத் தன்பால் சுவீகரித்துக் கொண்டதுதானே?

குளிர் மிகுந்த ஐரோப்பிய நாட்டில் அந்நாட்டினர் அணியப் பயன்படுத்திவரும் கோட்டு, சூட், "டை' இவற்றை வெப்பமண்டல நாட்டின் விற்பனைப் பிரதிநிதிகள் அணிந்து வியர்க்க விறுவிறுக்க வெயிலில் அலைகிறார்களே அதுபோன்றதுதான் இது.

ஆங்கில மேடைப்பேச்சில் தன்னிகரற்று விளங்கிய ரைட் ஆனரபிள் சீனிவாச சாஸ்திரியார், ஒருமுறை லண்டனில் விருந்து ஒன்றில் கலந்து கொண்ட போது, விரல்களால் எடுத்துச் சாப்பிட்டாராம். முகத்தைச் சுளித்த ஓர் ஆங்கிலேயர், ""இது சுகாதாரமான பழக்கமில்லையே ஸ்பூனைப் பயன்படுத்தி சாப்பிடுங்களேன்'' என்றாராம். அதற்கு சாஸ்திரியார் சொன்னாராம்: ""என் விரலாவது என் வாயில் மட்டும்தான் நுழைந்து வெளிவருகிறது ஆனால் ஸ்பூன்களைப் பலரும் அல்லவா பயன்படுத்துகிறார்கள்!''.

இப்படிப்பட்ட தனித்தன்மைதான் நம்மிடையே இன்று அரிதாகிவிட்டது. அதனால்தான் வாய் புண் ஆனாலும் பொருள்படுத்தாமல் "முள் கரண்டிகளை' மென்று கொண்டிருக்கிறோம்...! இங்கே குறிப்பிடுவது மொழியை மட்டுமல்ல!

(கட்டுரையாளர்: கலை, இலக்கிய ஆர்வலர்)

- நன்றி www . dinamani . com -

<< கரும்பலகை  Contact blogger  Font Help