சிறுகதை: மண்ணின் மனம்

-ஆர்.கீதாஞ்சலி

அடுத்த ஞாயிற்றுக்கிழமை ஊருக்குப் போகணும்...' அலுவலகத்தில் இருந்து வந்த களைப்போடு மனைவியிடம் சொன்னேன்.

"எதுக்குப் போகணும்... அந்த பாழாப்போன கிராமத்துக்கு நாம போகவேண்டாம்ன்னு எத்தனை தடவைத் தான் சொல்றது? என் மனைவியின் குரல் கொஞ்சம் ஓங்கியே ஒலித்தது.

""இன்னைக்கு கூட பெருமாள் லட்டர் போட்டிருந்தான். அக்காவுக்கு ரொம்பவே முடியல்லையாம். குடும்பத்தோடு ஒரு நடை வந்து பார்த்துட்டு போகணும்ன்னு எழுதியிருந்தான்?'' அக்கா பையன் பெருமாள் லட்டர் போட்ட விஷயத்தை பேன்டிலிருந்து கைலிக்கு மாறியவாறு மெதுவாகச் சொன்னேன். ""லட்டர் போடுவான்... ஏன் போடமாட்டான். இன்னைக்கு நாமெல்லாம் கொஞ்சம் வசதியாக இருக்கிறோம். பிச்சுப் புடுங்கலாம்ன்னு உங்க ஆளுக நினைப்பாங்க. அதுக்கு தான் ஊருக்கு வா... உலகுக்கு வா...ன்னு லட்டர் போட்டிருக்கான். நாம தான் உங்க ஆளுக சங்காத்தமே வேண்டாம்ன்னு ஏழு வருஷமா இந்த மெட்ராசில் வந்து இருக்கோமே. எதுக்கு திரும்ப திரும்ப தொந்தரவு செய்யறாங்களாம். ஒருத்தர் நல்லா இருக்கிறது உங்க ஆளுகளுக்குப் பிடிக்காதே,'' பொரிந்து தள்ளினாள் என் மனைவி.
எங்க வீட்டு ஆட்கள் என்றால் அவளுக்கு எப்போதுமே வேப்பங்காய்தான். ஆனால், அதற்கான காரணத்தைத் தான் இது வரை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இரவு சாப்பிட்டுவிட்டு குடும்பத்தோடு "டிவி' பார்த்துக் கொண்டிருந்தோம். போன் அடித்தது. என் மனைவி தான் எடுத்தாள். "யாரு அத்தையா... நான் பெருமாள் பேசறேன். நல்லா இருக்கீங்களா? போன் ரிசீவரை மீறி சத்தம் பீறிட்டு வந்தது.

மறுபடியும், ஊருக்கு வந்து அக்காவை பார்த்துவிட்டு போகும்படி வற்புறுத்தினான்.

எல்லாவற்றையும் பிளஸ் 1ல் சேர தயாராக இருக்கும் எங்கள் மகள் பகவதி, கேட்டுக் கொண்டிருந்தாள்.

"எப்படிப்பா இருக்கும் உங்க கிராமம். அத்தையின் முகமே எனக்கு மறந்து போச்சு. கிராமத்துக்குப் போலாம்பா'' ஆர்வத்துடன் சொன்னாள் பகவதி.
"ஆமாண்டி... அது கிராமமா... பாலைவனம் மாதிரி இருக்கும். மனுசங்களா அவங்க...'' என்று ஆரம்பித்து, மீண்டும் ஒருமுறை எங்கள் கிராமத்தையும், என் மனுஷாளையும் குறை கூற ஆரம்பித்தாள் என் மனைவி.
""ஏம்மா... அப்பாவும் அந்த கிராமத்து ஆள்தானே பிறகு நீ ஏன் அவரைக் கட்டிக்கிட்ட? மகளின் கேள்வியால் திடுக்கென நிமிர்ந்த என் மனைவியால் பதில் சொல்ல முடியவில்லை. எப்படி முடியும். என்னைத் தேடி பிடித்தல்லவா வந்து கட்டினர்.

எம்.காம்., முடித்து வங்கியில் தேர்வு எழுதி வெற்றிபெற்று அதிகாரியாக நான் வேலைக்கு சேர்ந்திருந்த நேரம்.

ஒரு நாள் மாலை நேரம், கல்யாண புரோக்கர் வந்து அப்பாவை சந்தித்தார்.
"வாரும்... வாரும்... இந்த இடத்திலே இந்த நேரத்திலே அதுவும் காரில் உம்மை நான் எதிர்பார்க்கல்ல'

"வீட்டில் மாப்பிள்ளையை வச்சுட்டு எதிர்பார்க்கல்லேன்னா எப்படி? எதிர்கேள்வி கேட்டவாறே வீட்டுத் திண்ணையில் வந்து உட்கார்ந்தார் அவர்.
"ஓய் நான் வந்திருக்கிற காரு யாருடையதுன்னு நினைக்கிறீரு. நாகர்கோவில் வடிவீஸ்வரத்தில் பேங்க் மேனேஜராக இருக்காரில்லையா பரமசிவம் பிள்ளை... அவரோடது தான். சுத்தி வளைக்காம விஷயத்துக்கு வாரேன். உங்க மகன் பேங்கில் வேலை பார்க்கிறானே, அவனை அவர் ஏதோ பேங்க் மீட்டிங்கில் பார்த்திருக்காரு. அவனை பிடிச்சிருந்திருக்கு. பயல் நம்ம ஜாதின்னு தெரிஞ்சதும் அவரோட ஒரே மகளுக்கு அவனைக் கட்டிக்கொடுக்கலாம்ன்னு நினைக்கிறாரு. அவருக்கு சொத்தெல்லாம் எக்கச்சக்கம் இருக்கு. பொண்ணு கிளி மாதிரி இருப்பா. நல்ல சம்பந்தம். விட்டுராதேயும்... மூச்சுவிடாமல் பேசிக்கொண்டே போனார் பண்டாரம் பிள்ளை.

இந்த சம்மந்தத்தில் அப்பா, அக்கா எல்லாருக்குமே விருப்பம் இருந்ததால் என் திருமணம் நடந்தது.

"இப்படித்தான் என் கிராமத்துக்கு தேடி வந்து அக்காவின் விருப்பதால் மட்டுமே எனக்கு மனைவி ஆனாள் உன் அம்மா...' என என் பெண்ணிடம் சொல்ல நாக்கு துடித்தது. அதன் பிறகு அந்த கிராமத்தை விட்டே என்னை பெயர்ந்தெடுத்து நாகர்கோவில் கொண்டு வந்ததும், அதைத் தொடர்ந்து சென்னை வந்ததும், அப்பாவின் மறைவுக்குப் பிறகு அக்காவை முழுசாக மறந்ததும் என் மகளிடம் நான் மறைத்த விஷயங்களில் சில. சரி... பழசெல்லாம் எதற்கு?

அக்காவைப் பார்க்க குடும்ப சகிதம் சென்னையிலிருந்து புறப்பட்டோம். கிராமம் எப்படி இருக்கும் என பார்க்க என் மகளுக்கு ஒரே ஆர்வம்.
நாகர்கோவிலில் இறங்கியவுடன் கிராமத்துக்கு போயிடலாம் என நான் சொன்னதற்கு என் மனைவியிடம் இருந்து உடனடியாக கடும் எதிர்ப்பு. "ஏன் இங்க எங்க அப்பா வீடு இருக்கே.. அங்கே போய் குளிச்சிட்டு அதுக்குப் பிறகு உங்க ஊருக்குப் போவோம்...' என்றாள். வந்த இடத்தில் பிரச்னை வேண்டாம் என அவள் விருப்பத்துக்கு விட்டுவிட்டேன்.

மாமனார் வீடு வழக்கமான உபசரிப்பு, உரிய மரியாதை காலை டிபனை முடித்தவுடன், "நம்ம காரிலேயே கிராமத்துக்கு போயிட்டு வந்துருங்களேன்...' அக்கறையோடு சொன்னார் மாமனார். தவிர்க்க முடியவில்லை.
கிராமத்தை நெருங்க நெருங்க... என் இதயத்துக்குள் ஏதோ இனம் புரியாத ஒரு உணர்வு. அழுகையாக வந்தது. இது சந்தோஷமா, வேதனையா, பிரித்துப் பார்க்க முடியவில்லை. கிராமம் மாறவே இல்லை. அப்படியே இருந்தது. அதே அம்மன் கோவில். கோவிலின் கூரை ஓடு கூட மாற்றியிருக்கவில்லை. கிராமத்து தெருக்களில் ஆள் நடமாட்டமும் இல்லை. அக்கா வீட்டின் முன் போய் கார் நின்றது

"மாமா வந்தாச்சு...' உற்சாக குரல் எழுப்பியவாறே வீட்டுக்குள் இருந்து பெருமாள் ஓடி வந்தான். அப்போது தான் வயலில் இருந்து திரும்பியிருப்பான் போலிருக்கு. உடலெல்லாம் வியர்வையும், மண்ணுமாக இருந்தது. "வாங்க மாமா, வாங்க அத்தே...' வரவேற்றாள். என் அக்காவின் மகள் ஈஸ்வரி. ""அம்மாவுக்கு புதுசா மருந்து ஏதோ வந்திருக்கு. உடனே வாங்கணும்ன்னு டாக்டர் கூப்பிட்டனுப்பியிருந்தாரு. அதனால், டாக்டரைப் பார்க்க அப்பா நாகர்கோவில் போயிருக்காரு'' வீட்டில் அத்தான் (அக்கா கணவர்) இல்லாததை சொன்னாள்.

வீட்டிற்குள் ஒரு பெரிய அறை. அதை ஒட்டி எதிர் எதிரே இரண்டு சின்ன அறைகள். வீட்டின் சுவர் வெள்ளையைப் பார்த்து ஒரு மாமாங்கம் ஆகியிருக்கும். ஆங்காங்கே காரை உதிர்ந்திருந்தது. ஒரு அறையில் அக்கா படுத்திருந்தாள். அறைக்குள் நுழைந்தவுடனேயே எதிர் சுவரில் சின்னசின்னதாக சாமி படங்கள். பெரிதாக அப்பா போட்டோ. அதன் மேல் அன்றைக்கு பூத்த செம்பருத்தி பூ. யாருமே படிக்காத இந்தக் குடும்பத்தில் என்னை மட்டும் கஷ்டப்பட்டு செலவு செய்து படிக்க வைத்து, வளர்த்து ஆளாக்கி இந்த நிலைக்கு கொண்டு வந்த அப்பா படம் என் வீட்டில் போஸ்ட்கார்டு சைசில் இருப்பது நினைவுக்கு வந்தது. அதில் பூ வைத்ததாக ஞாபகம் இல்லை. அறைக்குள் எட்டிப் பார்த்ததும் உடைந்து போனேன். ஆஜானுபாகுவாக இருக்கும் அக்கா, அந்தக் கட்டிலில் கிழிந்த வாழை இலையாக படுத்திருந்தாள். எங்களைப் பார்த்ததும் கண்ணால் சிரித்தாள்.
அக்காவின் அருகில் கட்டிலின் ஓரத்தில் உட்கார்ந்து கொண்டேன். "நல்லா இருக்கியா?' கையைப் பிடித்து தன் கைக்குள் வைத்துக் கொண்டாள். "நல்லா இருக்கியாமா?' என் மனைவியைப் பார்த்துக் கேட்டாள். அத்தையை உனக்கு தெரியுதா?' என் மகளின் கன்னத்தை வாஞ்சையுடன் தடவினாள். "என்னமோப்பா... நாலைஞ்சு மாசமா உடம்பு இளைச்சு, இப்படி ஆகிட்டேன். இன்னும் எத்தனை நாளோ... யாருக்கும் பாரமில்லாமல் போயிடணும்பா...' சொல்லிக் கொண்டு விரக்தியாகச் சிரித்தாள்.

என்னால் தாங்க முடியவில்லை. அழுதுவிட்டேன். சின்ன வயதில் ஆஸ்துமாவால் நான் மூச்சு திணரும் போதெல்லாம் இதே கட்டிலில் என்னை படுக்க வைத்து தேங்காய் எண்ணெய்யை சூடாக்கி, அதில் சூடத்தைப் போட்டு அது கரையும் வரை காத்திருந்து இளம் சூட்டோடு என் விலாக்களில் சூடு பறக்க தேய்த்துவிடுவாள். கோதுமை தவிட்டை சூடாக்கி ஒத்தடம் கொடுப்பாள். பனை ஓலைகளை அடுப்பில் திணித்து பற்ற வைத்து கொதிக்க கொதிக்க கருப்பட்டி காப்பி போட்டு என்னை தன்னோடு சாய்த்து வைத்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக ஊட்டுவாள். எனக்கு மஞ்சள் காமாலை வந்தபோது அவளும் பத்திய சோறு சாப்பிட்டாள்.
இப்படி எனக்காக எல்லாம் செய்த அக்கா இப்படி படுத்துக் கிடப்பதை பார்த்தபோது வேதனையைவிட எனக்குள் குவியல் குவியலாக குற்ற உணர்ச்சி.

காலை டிபன் சாப்பிடச் சொன்னார்கள். சாப்பிட்டுட்டேன் எனச் சொன்னவுடன் அவர்கள் முகம் அணிச்சமாக மாறியது. "மாமா உங்களுக்கு தண்டுக் கீரை புளிக்கறியும், அவியலும் பிடிக்குமாமே... அம்மா சொல்லியிருக்கா... மத்தியானத்துக்கு அதை வச்சிடுறேன்...' கூறினாள் என் அக்கா மகள் ஈஸ்வரி. "என் பொண்ணு கோமதி பத்தாங்கிளாசில் 90 சதவீதம் மார்க் வாங்கியிருக்கு...' இதை ஈஸ்வரி தகவலாக சொல்ல, என் மனைவியின் சாத்தான் மூளை வேலை செய்தது.

"என்னங்க ஸ்கூல் பீஸ் கட்ட பணம் கேட்பாள் போலிருக்கு. கேட்டால் இருநுறு ரூபாய் கொடுங்க. கூடுதலாக ஒண்ணும் வேண்டாம்... என என்னிடம் கிசுகிசுத்தாள்.

பெருமாளுக்கு நாங்க போனது ரொம்பவே சந்தோஷம். என் மகளுக்கு நுங்கு பறித்துக் கொண்டு வந்து கொடுத்தான். இளநீர் வெட்டி கொடுத்தான். சைக்கிள் கேரியரில் அவளை வைத்துக் கொண்டு கிராமத்தைச் சுற்றிக் காட்டினான்.
அக்கா அருகில் போய் உட்கார்ந்தேன். கையை எடுத்து என் மடியில் வைத்துக் கொண்டேன். அவ்வப்போது கண்ணை திறப்பதும், மூடுவதுமாக இருந்தாள். என்னென்ன சிகிச்சை எடுத்தாள் என்பதை திக்கித் திணறிச் சொன்னாள். "நடக்க முடியல்ல. மூட்டு வாதம்ன்னு சொன்னாங்க. எல்லா சிகிச்சையும் எடுத்தாச்சு. ஒண்ணும் குணமடைஞ்சபாடில்லை. இதுக்காக இரண்டு ஏக்கர் நிலத்தை வித்திருக்கேம்பா? மெல்லிய குரலில் சொன்னாள் அக்கா.
"உங்களை உங்க அக்கா வளர்த்ததெல்லாம் வாஸ்தவம்தான். இப்ப அவங்க சிகிச்சைக்கு நம்மகிட்ட பணம் எதிர்பார்க்கிறாங்க போலிருக்கு. நாம என்ன செய்ய முடியும். ஆயிரம் ரூபாய் வேணுமின்னா கொடுங்க...' என் மனைவி சொன்னதற்கு பூம்பூம் மாடு போல தலையாட்டினேன்.

ரொம்ப நாட்களுக்குப் பிறகு மண் மனத்தோடு மதியச் சாப்பாடு. புறப்படலாம்.. சாப்பிட்ட உடன் மனைவி அவசரப்படுத்தினாள். புறப்படத் தயாரானோம். கீரைத் தண்டுகளை மண்ணோடு பிடுங்கிக் கொண்டு மூச்சிரைக்க ஓடி வந்தான் பெருமாள். ஒவ்வொன்றும் மூன்றடி உயரமிருக்கும். "நம்ம வயலில் கீரை இல்லை. ஒரு கிலோ மீட்டர் போய் பிடுங்கிட்டு வாரேன்... காருக்கு பின்னாடி வச்சிரட்டா? எனக் கேட்டவாறே அந்த கீரைத் தண்டுகளை வளையாமல் பாந்தமாக சாக்கில் சுற்றி காரின் டிக்கியில் வைத்தான். ஒரு மஞ்சள் பையை என் மகளின் கையில் கொடுத்தான். அதனுள் பொன்னிறத்தில் கொய்யாப்பழம். "நம்ம தோட்டத்தில் விளைஞ்சது தான். என் மனைவி கையில் ஒரு பெரிய பித்தளை துக்கு பாத்திரத்தை திணித்தாள் ஈஸ்வரி. "நீங்க வாரீங்கன்னு சொன்னவுடனேயே நம்ம பவானி ஆச்சிகிட்ட முறுக்கு பிழிய அம்மா சொல்லிட்டா... அதுதான் துக்கில்...'
"மாமா போல படிச்சு பெரிய வேலைக்கு போகணும்ன்னு நினைச்சு மாமாகிட்ட ஆசிர்வாதம் வாங்கு.' தன் மகள் கோமதியிடம் சொன்னாள் ஈஸ்வரி. கோமதியும் பொசுக்கென எங்கள் காலில் விழுந்து கும்பிட்டது. ""இந்தாம்மா புக் வாங்க வச்சுக்க,'' என இருநுறு ரூபாயை நீட்டினேன். ""வேண்டாம் மாமா... பீஸ் கட்டியாச்சு. புத்தகமெல்லாம் வாங்கியாச்சு. நான் ரேங்க் வந்திருக்கிறதால ஸ்கூலில் கொஞ்சம் தான் பீஸ் வாங்கினாங்க.'' எவ்வளவோ சொல்லியும் அந்த பணத்தை வாங்க மறுத்துவிட்டாள் கோமதி.
அக்கா படுத்திருந்த அறைக்குள் சென்றேன். ""புறப்பட்டுட்டியாடா?'' கேட்டவாறே கண்விழித்தாள் அக்கா. என்னிடம் ஆயிரம் ரூபாயை நீட்டினாள் என் மனைவி. ""இந்தா வச்சுக்கக்கா?'' எனச் சொல்லியவாறே அக்கா கையில் பணத்தைக் கொடுத்தேன். மின்சாரத்தை தொட்டவள் மாதிரி உதறினாள். ""வேண்டாண்டா... பணமெல்லாம் இருக்கு... நான் போயிட்டேன்னா நீ வந்து வாய்க்கரிசி போட்டுட்டு போயிடு. அது போதும் எனக்கு...'' சொல்லும்போதே கண்ணீர் வடிந்தது.

என் மகளின் கையை பிடித்து இழுத்து பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டாள். ""நான் உனக்கு ஒரே அத்தை. உங்க அப்பன் சொல்லியிருக்கானா... இப்பவாவது உன்னை பார்க்க முடிஞ்சுதே...'' என சொல்லியவாறு தன் கையில் அணிந்திருந்த ஒரு தங்க வளையலைக் கழற்றி என் மகளின் கையில் போட்டாள். ""இதெல்லாம் வேண்டாங்க்கா?'' என நான் அவசரம் அவசரமாக மறுத்ததை அக்கா காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை. பிறகு, என் பக்கம் திரும்பி, ""நம்ம சுடலைமாடனுக்கு உன் பெயரில் அர்ச்சனை செய்யச் சொல்லி நேத்தைக்கு கொடுத்தேன். அந்த பிரசாதம் இது. எப்பல்லாம் உனக்கு மனசுக்கு கஷ்டமா இருக்கோ அப்பல்லாம் சுடலைமாடனை நினைச்சுக்கோ. உனக்கு ஒரு கஷ்டமும் வராது.'' பிரசாத பொட்டலத்தை தலையனைக்கு பக்கத்தில் இருந்து எடுத்து கண்ணில் ஒற்றி என்னிடம் கொடுத்தாள். ""நேரம் கிடைச்சா ஒரு நாள் தங்குறது மாதிரி வா...'' கண்ணால் விடை கொடுத்தாள்.

அந்த அறையை விட்டு வெளியே வரும்போது மனதினுள் பாறாங்கல்லை துக்கி வைத்தது போலிருந்தது. நான் ஓடி விளையாடிய வீடு... அன்பை அள்ளி அள்ளி ஊட்டிய அக்கா... அவளது குழந்தைகள்... நான் ஆண்டாண்டு காலமாக அவர்களை மறந்திருந்தாலும் என் மீதான பாசத்தை அப்படியே அடைகாக்கும் ஜீவன்கள். இவர்கள் என்றைக்குமே விட்டு விலகாத பாசத்துக்கு சொந்தக்காரர்கள்.

"இவர்கள் உங்ககிட்ட இருந்து பிச்சு பிடுங்கலாம்ன்னு நினைப்பாங்க...' இவர்கள் பற்றி என் மனைவி சொன்ன வார்த்தைகள். மீண்டும் மீண்டும் மனதைத் தாக்கியது. என் மனைவியை வெறுப்புடன் நிமிர்ந்து பார்த்தேன். என் உணர்வுகளை அவள் புரிந்திருப்பாள் என நினைக்கிறேன். தலை குனிந்தாள்.
பெருமாள், ஈஸ்வரி, கோமதி ஆகியோர் காரின் அருகில் வந்து நின்று சந்தோஷமாக கையசைத்தனர். கூலிங்கிளாஸை எடுத்துப் போட்டுக் கொண்டேன். என் கண்ணீர் வெளியே தெரிவதை விரும்பவில்லை. மீண்டும் பாசாங்கு உலகுக்கான பயணம் துவங்கி விட்டது. கார் மெல்ல மெல்ல வேகமெடுத்தது. திரும்பிப் பார்த்தேன். அழகனாபுரம் கிராமம் பார்வையில் இருந்து மறைந்திருந்தது. மனது மட்டும் அதே கிராமத்தில்.

- நன்றி www . dinamalar . com -

<< கரும்பலகை  Contact blogger  Font Help