சிறுகதை: உறவு என்பது... [ Ulavu enpathu...]

தேடி வருவதும், தேடிப்போவதும்
படுதலம் சுகுமாரன்


ஊருக்குள் நுழைந்தது கார்.
காருக்குள் இருந்தபடி ஆர்வமாக வெளியில் பார்த்தான் ஆனந்தன். கடந்த வருடங்களில் அவன் வரவை எதிர்பார்த்து... ஊர்மக்கள் பத்து பேராவது சாலை ஓரம் கூடியிருப்பர். இப்போதும் அது போலவே ஊர் மக்கள் திரண்டு வரவேற்க காத்திருப்பர் என நம்பினான். ஆனால், இந்த முறை வரவேற்க ஆளில்லாமல் தெருக்கள் வெறிச்சோடி கிடந்தன.

ஆனந்தனுக்கு ஆச்சரியமாக இருந்தது. தான் வருவது யாருக்கும் தெரியாதா, பெரியம்மா யாருக்கும் தகவல் சொல்லவில்லையா? வருடம் தோறும் ஆடித் திருவிழாவுக்கு வந்துவிடுவேன் என்பது எல்லாரும் அறிந்ததுதானே... கடந்த நாலு வருடங்களாய் தொடர்ந்து வந்து கொண்டுதானே இருக்கிறேன்.
ஒருவேளை, நான்தான் தேதி மாறி வந்துவிட்டேனோ என்று பலவகையான கேள்விகள் உதிக்க, கார் ஹாரனை இரண்டு முறை அழுத்தினான். அந்த ஓசைக்கு ஓரமாக கட்டிப் போட்டிருந்த இரண்டு கன்று குட்டிகள் மிரண்டதுதான் மிச்சம்.

தன் வீட்டருகில் வண்டியை நிறுத்தி, இறங்கும் போதே பார்வையை ஓட விட்டான். எதிர் வீட்டு ஆறுமுக மாமாவும், இன்னும் சிலரும் உட்கார்ந்திருந்தனர். ஏதோ பேச்சு மும்முரம் அவன் வந்ததைக் கண்டும் காணாததுபோல பேசிக் கொண்டிருந்தனர். சற்று தொலைவில் சைக்கிளை உருட்டிக் கொண்டிருந்த முருகேசன், சித்தப்பா, நின்று, வெறித்து பார்த்துவிட்டு அவர் வழியே போனார். பக்கத்து வீடுகள் கதவை சார்த்திக் கொண்டு "கப்சிப்' என்று இருந்தது. தெருவில் போன யாரோ, ""இப்பதான் வந்தியா தம்பி,'' என்று கேட்டு, பதிலுக்கு காத்திராமல் போய்விட்டார். ஆனந்தனுக்கு ஏமாற்றமாயிற்று.

இதற்குள், வீட்டின் கதவைத் திறந்து கொண்டு, பெரியம்மா வெளிப்பட்டார். வயோதிக உடம்பு. ""பெரியம்மா... சவுக்யமா இருக்கியா?'' என்று கேட்டபடியே "டிக்கி'யை திறந்து, சென்னையிலிருந்து வாங்கி வந்த பழக்கூடை, துணிமணிகள் அடங்கிய பெட்டி, பெரியம்மாவுக்காக வாங்கி வந்த சாய்வு நாற்காலி, குட்டி ஸ்டூல், இத்யாதிகளை இறக்கி, அவனே உள்ளே கொண்டு போனான். இதை சிலபேர் அவரவர் வீட்டு வாசலிலும், திண்ணைகளிலும் இருந்தபடி பார்க்கத்தான் செய்தனர். ஆனால், யாரும் உதவி செய்ய முன் வரவில்லை. ""ஏன் பெரியம்மா... ஊர்க்காரங்களோடு பகைச்சுகிட்டியா? எல்லாரும் சேர்ந்து உன்னை ஒதுக்கி வச்சிட்டாங்களா... வீட்டுப்பக்கம் ஒரு ஈ, காக்கையும் வரமாட்டேங்குது'' என்றான். ""வராப் போன போவட்டும். சோறு இறங்காதா, தண்ணி இறங்காதா இந்த முறையாவது பொண்டாட்டி, புள்ளைங்களை அழைச்சு வந்திருக்க கூடாதா?'' என்று பேச்சு கொடுத்துக் கொண்டே, அவன் குளிப்பதற்காக வெந்நீர் போட்டாள் பெரியம்மா. சோப்பும், துண்டும் எடுத்து வைத்தாள்.

""என்ன செய்யறது. பசங்களுக்கு பரீட்சை நடக்குது. புவனாவுக்கு ஆபிஸ்ல லீவு கிடைக்கலை. எனக்கும்தான் தலைக்கு மேல வேலையிருக்கு. ஆடித் திருவிழாவை காரணமா வச்சுகிட்டு வருஷத்து ஒரு முறையாவது ஊரையும், ஊர் மக்களையும் பார்த்துடணும்ன்னு ஆசை. எல்லாத்தையும் ஒதுக்கி வச்சிபுட்டு ஓடியாந்துட்டேன்'' பதில் சொல்லிக் கொண்டே குளிக்க ஆயத்தமானான்.

விறகு அடுப்பில் சுட வைத்த தண்ணீரில் குளித்தபோது, உடம்புக்கு சுகமாக இருந்தது. அம்மியில் அரைத்த புதினா துவையலில் தொட்டு சாப்பிட்டபோது, இட்லி மிகவும் சுவையாக இருந்தது. வீட்டுக்கு பின்னால் தோட்டம் இருந்தது. நிழலில் மடிப்பு கட்டிலை விரித்து போட்டு அமர்ந்தான். பெரியம்மா, அரைபடி பாலை கற்கண்டைப் போட்டு காய்ச்சிக் கொடுத்து, ""குடிச்சுபுட்டு காந்தாட படுத்து துங்கு... மத்யானம் சாப்பாட்டுக்கு எழுப்பறேன்...'' என்று சொல்லிவிட்டு போனாள்.

ஆனால், ஆனந்தனுக்கு வெறுப்பும், சலிப்புமாக வந்தது. ஊருக்குள் வந்து ஒரு மணி நேரம் ஓடிவிட்டது. நலன் விசாரிக்க ஒருவரும் வராதது ஏமாற்றமாய் இருந்தது. எதையோ இழந்து விட்டது போல... பாலைக் குடித்துவிட்டு நீட்டிப் படுத்தான். மாஞ்செடி, தென்னஞ்செடி, நாவல் செடியெல்லாம் உயர உயர வளர்ந்து பச்சைக் குடைவிரித்திருந்தது. காற்றடிக்கும் போதெல்லாம் "சொட், சொட்டென்று நாவற் பழம் அங்கொன்றும் இங்கொன்றுமாக விழுந்து கொண்டு இருந்தது. அந்தப் பழங்கள் கொஞ்சம் துவர்ப்புதான் என்றாலும், சொந்த மண்ணின் பழம் என்பதால் அவன் விருப்பத்தோடு எடுத்து உண்பான். இப்போது, ஏனோ, அதன்மீது நாட்டம் ஏற்படவில்லை.

தன் வருகை, எந்த சலனத்தையும், உற்சாகத்தையும், பரபரப்பையும் உண்டு பண்ணவில்லை. தன்னை யாரும் கண்டுகொள்ளவில்லையே என்று ஏக்கமா யிருந்தது ஆனந்தனுக்கு, அது சொந்த ஊர் என்றாலும், நீண்ட வருடங்களாக அதை பிரிந்தே இருந்தவன். பத்து வயது வரைக்கும்தான் அவன், அந்த ஊரில் இருந்தான். அதற்குள்ளாகவே தாய், தந்தையை இழந்துவிட்டான்.
பெரியப்பாதான், "ஊரில் இருந்தால் அப்பா, அம்மா நினைப்பு அதிகமாகி ஏக்கமா போயிடும்' என்று வெளியூர் பள்ளியில் சேர்த்து, ஹாஸ்டலில் தங்கி படிப்பதுபோல் ஏற்பாடு செய்து விட்டார். படிப்பு முடியும் வரை அனேகமாக ஊர் பக்கம் வரவில்லை. வேலையும் வடமாநிலத்தில் கிடைத்தது. அங்கே போய் விட்டான் உடன் வேலை செய்த புவனாவை காதலித்து, ரெஜிஸ்தர் மேரேஜ்.

பெரியப்பா இறந்தபோது, குடும்பத்துடன் வந்து, வாரிசு இல்லாத அவருக்கு இறுதிக் கடன் முடித்து விட்டு போனான். பெரியம்மாவை தன்னுடன் வந்து விடும்படி சொன்னான். ஊரை விட்டு வர பிரியப்படவில்லை அவள். ஆகவே, அவளுக்கு மாதாமாதம் பணம் அனுப்பினான். வருடங்கள் உருண்டு விட்டது.
புரொமோஷன் வாங்கி இடமாற்றத்தால் சென்னைக்கு வர நேர்ந்த பிறகுதான், சொந்த ஊர் மீது ஆவல் உண்டாயிற்று. அந்த வருட ஆடி திருவிழா பற்றி பெரியம்மா கடிதத்தில் தெரிவிக்க... ஓடோடி வந்தான். அடேயப்பா அவனைப் பார்க்கத்தான் எத்தனை கூட்டம். பங்காளிகள், சம்பந்திகள், நண்பர்கள், தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் என்று நாள் முழுக்க ஆட்கள் வந்த வண்ணமாக இருந்தது. மிரண்டு போனாள் புவனா.

"என்னங்க... உங்களுக்கு இவ்வளவு உறவுக்காரங்களா? அடிக்கடி, "நான் அப்பா, அம்மா இல்லாத அனாதைன்னு பீல் பண்ணுவிங்களே... இவ்வளவு மனுஷாளை வச்சுகிட்டு எப்படி நீங்கள் அனாதையாக முடியும்'' என்று வியந்தாள். நெகிழ்ந்து கண்ணீர் பெருக்கினான் ஆனந்தன். தங்கள் வீட்டிற்கு வந்து சாப்பிட வேண்டும் என்று வருந்தி அழைக்காத பேர்களே இல்லை.
ஒருநாளில் எத்தனை வீட்டில் சாப்பிட முடியும்? எல்லாருடைய உபசரிப்பையும் ஏற்றுக் கொள்ள முடியாமல் திணறிப் போனான். அவன் மறுநாள் புறப்படும்வரை உடனிருந்து, வழியனுப்பி வைத்தவர்கள் அனேகம்.
அவர்கள் எல்லாம் இன்று எங்கே?

"எல்லாரும் ஆனந்தனையே பார்த்துகிட்டு உட்கார்ந்துட்டால், அங்கே சாமிய பாக்கறது யாரு. திருவிழா நடக்க வேணாமா?' என்று குரல் கொடுத்து ஆட்களை கலைக்க வைத்த நிலமை மாறி, "ஆனந்தா எப்ப வந்தே?' என்று விசாரிக்கவும் ஆள் இல்லாமல் போனது ஏன்?' என்மீது ஆர்வமற்று போனது ஏன்? என்று தவித்துப் போனான்.

சட்டென்று அவன் மனதில் ஒரு மின்னல் தெறிப்பு. "ஆனந்தா... ஒவ்வொரு முறையும் உன்னை வந்து பார்க்க, தரிசனம் பெற நீ என்ன கடவுளா, அதிசய மனிதனா, மந்திரியா, நடிகனா? ஏதோ ரொம்ப வருஷங்களுக்கு பிறகு உன்னைப் பார்த்ததால ஆரம்பத்துல கொண்டாடினாங்க. அது எப்பயுமே இருக்கும்ன்னு எதிர்பார்க்கறது பைத்தியக்காரத்தனம். உன்னால் அவர்களுக்கு ஆக வேண்டியது என்ன இருக்கு. அவரவர்க்கு ஆயிரம் வேலைகள். எல்லாவற்றையும் போட்டுவிட்டு, நீ வரும் போதெல்லாம் உனக்கு ஆலவட்டம் சுற்றுவார்களோ உனக்கு ஆட்கள் வேண்டுமானால் நீயும் போகணும். ஒவ்வொரு வீடாய், ஒவ்வொரு ஆளாய் போய் பார்...' என்றது மனசு.

கட்டிலை விட்டு துள்ளி எழுந்தான். வீட்டுக்குள் நுழைந்து, சட்டை மாட்டிக் கொண்டான். வெளியில் வந்தான். முதலில் யார் வீட்டுக்கு விஜயம் செய்வது? சடக்கென்று எதிர்வீட்டில் நுழைந்தான். மாவு அரைப்பது, மாலை கோர்ப்பதும், வீடு கழுவுவது என்று பரபரத்துக் கொண்டிருந்த அந்த வீட்டு ஆட்கள், ஆனந்தனைப் பார்த்ததும் வேலைகளை அப்படி அப்படியே போட்டுவிட்டு எழுந்து வந்தனர். ""என்ன மாமா சவுக்யமா இருக்கிங்களா? அத்தே நீங்க எப்படி இருக்கீங்க? பாட்டிம்மா... நல்லா இருக்கீங்களா?'' என்று அங்கு இருந்தவர்களை அக்கறையுடன் விசாரித்தான்.

""வாப்பா ஆனந்தா வண்டி வந்தத பார்த்தம். நீதான் வந்திருப்பேன்னு தெரியும். எல்லார்க்கும் கை வேல இருந்திச்சு. வர முடியல. அதுவுமில்லாம இப்பதான் களைப்பா வந்திருப்ப. ரெஸ்ட் எடுக்கட்டும், அப்புறமா பார்க்கலாம்ன்னு இருந்துட்டம். வா... உட்காரு. மனைவி, குழந்தைங்க சவுக்யமா...முன்னைக்கு இப்ப லேசா இளச்சாப்ல தெரியறயே ஏன்?'' என்று வாஞ்சையுடன் கேட்டு, அவன் கையைப் பிடித்து நாற்காலியில் உட்கார வைத்தனர். "இப்பதான் சாப்பிட்டேன். எனக்கு எதுவும் வேண்டாம்...' என்று மறுத்தும் அவர்கள் அன்பாக கொடுத்த காபி, பலகாரத்தை கொஞ்சமேனும் சாப்பிட வேண்டி வந்தது. அவர்களோடு பேசும் போதுதான், கிருஷ்ணன் மாமாவுக்கு உடம்பு சரியில்லாமல் கிடக்கும் சேதி தெரிந்தது.

அங்கிருந்து நேரே கிருஷ்ணன் வீட்டுக்கு போனான். அவன் வருகையால் அந்த வீடு பரபரப்பானது. கட்டிலில் கிடந்த மாமா அருகில் உட்கார்ந்தான்.
அவனைக் கண்டதும் அந்த முதியவர் கண்களில் ஆர்வம் மின்னியது.
எழுந்து உட்கார சிரமப்பட்டார். ""நீ வந்தேன்னு கேள்விப்பட்டேன். என்னால, எழுந்து வரமுடியலப்பா'' என்று ஆயாசமாக பேசினார். ""நானே வந்துட்டனே மாமா...' உடம்புக்கு என்ன பண்ணுது... எவ்வளவு நாளா இப்படி?'' என்று விசாரித்தான். அந்த வீட்டினர், பணிவாக பதில் அளித்தனர். தனக்குத் தெரிந்த சில யோசனைகளையும் சொன்னான் ஆனந்தன். அவன் வந்ததில் அந்தக் குடும்பம் மிகவும் சந்தோஷப்பட்டது.

அவர்கள் சொல்லித்தான், ஜெயராமன் வீட்டில் குடும்பத்தகறாரு என்றும், பெற்றவர்களை அவன் சரியாக நடத்துவதில்லையென்றும் தெரிய வந்தது.
அவர்களைத் தேடிப் போக, ஜெயராமன் இல்லை. அவன் பெற்றோர் இவனிடம் வாய்விட்டு கதறினர். இவனும் கண்கலங்கினான். அவர்களுக்கு ஆறுதலும், சமாதானமும் சொன்னான். ""ஜெயராமன் அறியாமையில் செய்கிறான். நான் அவனிடம் பேசுகிறேன். உங்களுக்கு ஏதாவது தேவைன்னா என்னைக் கேளுங்க. நானும், உங்களுக்கு மகன் போல...'' என்றான். அவர்கள் கவலையெல்லாம் பறந்து விட்டது போல அவனைக் கொண்டாடினர்.
கணேசனின் மகளுக்கு கல்யாண ஏற்பாடு என்று அவர்கள் சொல்லப்போய், அங்கிருந்து புறப்பட்டு நேரே கணேசன் வீட்டிற்கு போனான்.

"புருஷன் வீட்டில் வாழப் போகும் பெண்ணே... தங்கச்சி கண்ணே...' & என்று பாடினான். ""அம்மா... ஆனந்தன் அண்ணன் வந்திருக்கு...'' என்று அந்த பெண் குதுகலிக்க... ஆனந்தனை வரவேற்க அந்த குடும்பம் ஓடோடி வந்தது.
உணர்ந்து கொண்டான் ஆனந்தன்.

உறவு என்பது தேடி வருவது மட்டுமல்ல தேடிப் போவதும் என்று

- நன்றி www . dinamalar . com -

<< கரும்பலகை  Contact blogger  Font Help