கோபம் [ Kobam ]
கோபம் என்னும் நெருப்பு
சூ . அ. செல்வநாதன்

காலை நேரம்! எல்லோருக்கும் நெருக்கடியான பொழுது அது! ரயில், பேருந்தில் செல்லும் பயணிகளுக்கு மூச்சுமுட்டும் நேரம்! இருவர் காரசாரமாக ஒருவரைப் பார்த்து ஒருவர் கத்திக் கொண்டிருந்தனர். அன்றாடம் இது சகஜம் என்பதுபோல சக பயணிகள் நின்று கொண்டிருந்தனர். இருவருக்கும் கோபப்பட ஏதோ காரணம் கிடைத்திருக்கும். கத்திக் கொண்டிருந்த இருவரும் தாங்கள் இறங்க வேண்டிய ரயில் நிலையம் வந்ததும் ஒன்றும் நடவாததுபோல இறங்கி விறுவிறு என்று அவரவர் திசையில் நடக்க ஆரம்பித்துவிட்டனர்.
மனித மெய்ப்பாடுகளுள் ஒன்று கோபம். உணர்வுபூர்வமான விழிப்புணர்வு பெற்ற ஒருவனிடம் கோபம், பயம், கவலை, மகிழ்ச்சி போன்ற உணர்வுகள் இயல்பாக வெளிப்படுவதுண்டு. இங்கு சொல்லப்பட்ட முதல் மூன்றும் எதிர்மறையான குணங்களாகவும் கடைசி உணர்வு மட்டும் நேர்மறையானதாகவும் இருப்பதைப் பார்க்க முடிகிறது.
உளவியலார் கோபத்தை இரண்டு வகையாகப் பாகுபடுத்துவர். முதல்வகை கோபத்தால், கோபப்படும் மனிதர் தன்னுடைய நிலையைக் கட்டுப்படுத்த முடியாமல் கட்டுப்பாட்டை இழந்து விடுகிறார். அப்போது அவர் குரலை உயர்த்திப் பேசுகிறார்; கத்துகிறார்; கையில் கிடைக்கும் பொருள்களைக் கீழே வீசி உடைக்கிறார். அருகில் இருப்பவர் மனம் புண்படும்படி பேசுகிறார். தன்னுடைய கருத்தை விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டு மீண்டும் மீண்டும் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டு இருக்கிறார். தன் பக்கத்தை நியாயப்படுத்துகிறார்.
இத்தகைய நபர், கோபப்படும்போது அவருக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இருதய நோய்க்கு வாய்ப்பு அதிகமாகிறது. ஒற்றைத் தலைவலி அடிக்கடி ஏற்படுகிறது. மனஅழுத்தம் உண்டாகிறது. அவருடைய முக்கிய உறவுகளில்கூட விரிசல் ஏற்படுகிறது.
மற்றொரு வகையான கோபத்துக்கு ஆட்படும் மனிதர், கோபத்தை வெளிப்படுத்தாமல் தனக்குள்ளே மறைத்தும் புதைத்தும் கொள்கிறார். இதுவும் நல்லமுறையாகக் கருதப்பட மாட்டாது.
கோபம் வரும்போது அதனைக் கட்டுப்படுத்துவது எப்படி? கோபம் வரும்போது அதை நாம் உணர்ந்து கொள்ளப் பழக வேண்டும். அதுபோன்ற சமயத்தில் எதுவும் பேசாமல், எதுவும் செய்யாமல் இருக்க முயல வேண்டும். முடிந்தால் கோபப்பட வைத்த சூழ்நிலையிலிருந்து போய்விடுவது நல்லது. இத்தகைய சமயத்தில் தியானம் செய்யலாம். இஷ்ட தெய்வத்தை நினைத்து ஒரு மந்திரம் சொல்லலாம். கோபத்தைத் தணியச் செய்ய இது உதவும். உளவியல் அறிஞர் 1 முதல் 100 வரை எண்களைச் சொல்லச் சொல்கிறார்கள். குடத்திலிருந்து குளிர்ந்த நீர் எடுத்து ஒரு டம்ளர் குடித்தால் கோபம் தணிந்துவிடும் என்பர்.
கோபப்படுத்திய நபர் நமக்கு முன்பின் தெரியாதவராக இருந்தால் உடனே அதை மறந்து விடுவது மிகவும் நன்மையாக அமையும். தெரிந்த நபராக இருந்தால் சிறிது நேரம் கழித்து அவரிடம் சென்று நம்முடைய நியாயத்தை எடுத்துச் சொல்லலாம். நம்முடைய செயலால் அவர் காயப்பட்டிருந்தால் மன்னிப்புக் கேட்பது நம்முடைய உறவில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் ""வகுப்பறையின் முகத்தில் ஒரு கீரலை உருவாக்க, பாடம் சொல்லித் தரும் பேராசிரியரின் முன்கோபம் போதும்'' என்கிறார் டானியல் கோல்மன் என்ற அறிஞர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, தான் வேலை பார்த்த அலுவலகத்தில் தன்னுடைய உயர் அதிகாரியோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டோடு அப் பெண்மணி வீட்டுக்கு வந்தார். இரவு பன்னிரெண்டு மணி வரை அதிகாரி மீது தனக்கு இருந்த கோபத்தை வெளிப்படுத்தாமலே அமைதியாக இருந்தார். ஒரு வெள்ளைத்தாளை எடுத்தார். தன்னுடைய கோபத்தை அதில் கொட்டினார். நிம்மதியாகத் தூங்கினார். மறுநாள் அதைப் படித்துப் பார்த்தார். அது அழகான சிறுகதையாக இருந்தது. இன்று அவர் ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர்.
வீடுகளில் பிள்ளைகள் படிக்காமல் சுட்டித்தனம் செய்து அடம்பிடிக்கும்போது பெற்றோர் அவர்கள் மீது கோபப்படுவதைப் பார்த்திருக்கிறோம். கோபத்தில் கையில் கிடைக்கும் பொருளால் கண்மண் தெரியாமல் அடித்துவிட்டு பிறகு உட்கார்ந்து அழும் பெற்றோரை என்ன சொல்வது?
உன் கோபம் நியாயமானது. அதை ஆக்கத்துக்குப் பயன்படுத்து என்கிறார் ஒரு கவிஞர்.
- நன்றி www . dinamani . com -