மாற்றங்கள் நிகழ...

நிற்க அதற்குத் தக!
க.ப. அறவாணன்

தமிழர், நீண்டகால இலக்கியப் பாரம்பரியத்தைப் பெற்றிருந்த போதும் அன்றுதொடங்கி இன்றுவரை அவர்களை நல்ல எழுத்துகள் பெரிய அளவில் பாதிப்பதில்லை. இதற்குரிய காரணங்கள் ஆராயப்பெற்று, உரிய குறைகள் நீக்கப்பெறுதல் வேண்டும். நல்லவற்றைப் படிக்கும் வழக்கமும், அவற்றை வாழ்க்கையில் கடைப்பிடிக்கும் வழக்கமும் தமிழரிடையே மிகக் குறைவு என்று யுனெஸ்கோ புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

பலநூறு ஆண்டுகள் தொன்மையுடைய சீன மக்கள், இன்றுவரை அமெரிக்க எதிர்ப்புக்கு முன்பும், ஐரோப்பிய ஜப்பான் ஆதிக்கத்திற்கு முன்பும், தரம் தாழாமல் நிலைபெற்றிருப்பதற்குக் காரணம், சீன மக்களிடம் இரண்டறக் கலந்துள்ள கன்ஃபூசியசின் போதனைகள் ஆகும். அவர்தம் போதனைகளுள் தலையாயவை 1. ஒற்றுமை (Unity), 2. ஒழுக்கம் (Morality), 3. தலைமைக்கு மதிப்பளித்தல் (Respect for authority), 4. பதவி அடுக்குகளில் முதன்மையை உணர்ந்திருத்தல் (The Importance of Hierarchical Relationships). இப்போதனைகளுக்கு மறு உயிர்ப்பு அளித்து, சீன நாடு மழலையர் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை கட்டாயமாக 2005 டிசம்பர் முதல் போதிக்கத் தொடங்கி இருக்கிறது.

இங்கிலாந்து சமுதாய வரலாற்றை உற்று நோக்கும்போது நல்ல படைப்புகளின் பாதிப்பு அம் மக்களைச் சென்று அடைகிறது. சார்லஸ் டிக்கன்ஸ் (1812 70) புகழ்பெற்ற ஆங்கில நாவலாசிரியர் ஆவார். இவர் 1837இல் பிக்விக் பேப்பர்ஸ் (Pickwick Papers) எனும் நகைச்சுவைப் படைப்பை எழுதிப் புகழ் பெற்றார். தொடர்ந்து 1838இல் ஆலிவர் டிவிஸ்ட் (Oliver Twist) எனும் சிறந்த நாவலை எழுதினார். இந்நாவலின் அடிப்பொருள் டிக்கன்சின் சொந்த வாழ்க்கையாகும். அவருடைய எழுத்துகள் நாட்டில் பரவியிருந்த அறக்கேட்டையும், குற்றப் பெருக்கையும், ஊழலையும் சீற்றத்தோடு சாடின. விளைவாக, டிக்கன்ஸ் தம் எழுத்தில் சுட்டிக்காட்டிய குறைகளையும், குறிப்பாகக் குழந்தைத் தொழிலாளிகளின் தாள முடியாத் துன்பங்களையும் நீக்கும் முகமாக ஒரு தனி அமைச்சரே, அரசியால் அமர்த்தப் பெற்றார். அதன் பின்புதான் இங்கிலாந்தில் குழந்தைத் தொழிலாளி முறை ஒழிந்தது. ஒரு படைப்பின் மூலம், படைப்பாளி சொல்லும் கருத்து, எந்த அளவு அரசின் செவிகளில் வீழ்ந்து, நடைமுறைக்கு வருகிறது என்பதற்கு இது சான்று.

அண்மையில் அமெரிக்கா பற்றி அந்நாட்டு மாத ஏட்டில் Readers Digest, Jan2006) காத்ரைன் வாலஸ் எனும் அறிஞர் கட்டுரை எழுதியிருந்தார். அக் கட்டுரையின் சாரம் இதுதான். இயற்பியல், வேதியியல், கணிதவியல் முதலான அடிப்படை அறிவியலைக் கற்கும்போக்கும், ஆராயும் போக்கும் அமெரிக்காவில் குறைந்து வருகின்றன. தன்னிடம் இருக்கும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான பணிகள் அனைத்தும் சீனா, இந்தியா ஆகிய நாடுகளுக்கு வழங்கப்பெற்று வருகின்றன. இதன் விளைவாக அமெரிக்காவில் அடிப்படை அறிவியல் கல்வியும் பல தொழில்நுட்பக் கல்வியும், ஆராய்ச்சியும் குறைந்து வருகின்றன என்பதாகும். இந்நிலையில் பிப்ரவரி 1, 2006 அமெரிக்க நாடாளுமன்றப் பேரவைகள் இரண்டையும் ஒருங்கு கூட்டி, அந்நாட்டின் அதிபர் ஜார்ஜ் புஷ் சில திட்டங்களை அறிவித்தார். எழுபதாயிரம் கணித அறிவியல் பாடம் போதிக்கும் அமெரிக்கருக்கு சிறப்புப் பயிற்சி அளிப்பதும் சீனாவையும், இந்தியாவையும் அமெரிக்கர் முந்த உரிய நடவடிக்கை எடுப்பதும் அறிவிப்பில் தலைமையிடம் பெற்றிருந்தன. நாம் இங்கே கவனிக்க வேண்டியது: அமெரிக்க அறிஞர் ஒருவரால் ஜனவரி மாதம் சுட்டிக்காட்டப்பட்ட ஒரு குறையை, சில வாரங்களுக்கு உள்ளாகவே நீக்கும் நடவடிக்கையை அந்நாட்டின் அதிபரே மேற்கொண்டார் என்பதாகும்.

சோவியத் ஒன்றியம், லெனின் தலைமையில் பொதுவுடைமை அடிப்படையில் 1917இல் உருவாக ஒரு காரணமாக இருந்தோர் அந்நாட்டின் எழுத்தாளர்களே. பிரான்சின் லூயி பரம்பரை அரசர்களின் கொடுங்கோன்மையில் இருந்து அந்நாட்டை விடுவிக்கப் பிரெஞ்சுப் புரட்சி 1757இல் நிகழ, ரூசோ, வால்டேர், விக்டர் ஹியூகோ ஆகியோர்தம் படைப்புகள் காரணங்களாக விளங்கின. யூத மக்களின் வரலாற்றில் மோசசின் பத்துக் கட்டளைகள், யூதர்களால் இன்று வரை உயிராகப் போற்றப் பெறுகின்றன. ஆனால் ஓரளவு கூடத் தமிழரை நல்ல எழுத்துகள் பாதிப்பதில்லை. இதற்குரிய காரணங்கள் அறியப்பெற்று உரிய குறைகள் உடனே களையப்பட்டால்தான் தமிழ்நாட்டில் அறிவுசார்ந்த புரட்சி மாற்றங்கள் நிகழ முடியும்.

படைப்பாளியின் கருத்துகள் பரவாமைக்குக் காரணங்கள்:

அரசும், அரசுகளும்: தமிழர்தம் வரலாற்றில் சங்ககாலத்து ஆட்சி செய்த அரசர்கள், எழுத்துகளுக்கும் எழுத்தாளர்களுக்கும் அஞ்சி வாழ்ந்தனர்; கேட்டு நடந்தனர் என்று உறுதியாகத் தெரிகிறது. அச்சமே இல்லாமல் அரசர்களின் தவறுகளை அக்காலப் புலவர்கள் நேருக்கு நேர், எடுத்துச் சொல்லிக் கண்டித்தது பதிவாகி இருக்கிறது. அறிஞர்களை அரசர்கள் மதித்த காலம், சங்க காலத்திலேயே முடிந்துபோய் விட்டமையை வரலாறு காட்டுகிறது. தமிழ் இலக்கிய வரலாற்றில் தன்னிகரற்ற ஒருவராக விளங்கும் திருவள்ளுவருக்கு, ஆதரவாக அரசு எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை. கம்பருக்குத் தம் இலக்கியத்தைப் படைக்க சோழ அரசன், உதவவில்லை என்பதுடன், புறக்கணித்தான் என்று கம்பர் வரலாறு பேசுகிறது. புறக்கணித்த அரசனைக் கம்பர், "மன்னவனும் நீயோ' என்ற பாடல்வழி அரசனைப் புறக்கணித்துப் பாடிய பாடல் புகழ்பெற்ற ஒன்றாகும்.

மக்கள் கல்லாமை: அறிஞர்களின் படைப்புகள் அனைத்தும் எழுத்தால் ஆனவை. இவற்றை அறியவும், உணரவும், பின்பற்றவும் படிப்பறிவு தேவை. ஆனால், தமிழ் மக்களிடையே படிப்பறிவு இல்லை. ஐரோப்பியர் வருகை தந்த பதினைந்தாம் நூற்றாண்டுக்குப் பின்னரே மக்கள் அனைவரும் பயிலும் பொதுப்பள்ளிகள் கிறித்துவ மிஷினரியால் தோற்றுவிக்கப்பட்டன. அதன் பின்பே, எல்லாத் தரத்து மக்களின் குழந்தைகளும் படிக்கத் தொடங்கினர். இம் முயற்சி நானூறு ஆண்டுகளாகத் தமிழகத்தில் நடந்து வந்த போதும், பள்ளிக் கல்வியை இலவசம் ஆக்கிய பின்பும், தமிழரிடையே கல்லாதோர் எண்ணிக்கை 35% மேல். பள்ளிக்குச் செல்லாத அல்லது சென்று சில ஆண்டுகளுடன் நடுவேயே படிப்பை விட்டுவிடுகிற குழந்தைகள் 70% மேல் உள்ளனர். இவர்கள்தான் பின்னாளில் வளர்ந்து, உணர்ச்சிக்கு ஆளாகி இரசிக மன்றத்தினர் ஆகின்றனர்.

இரசிகத் தனம்: தமிழரைப் பொறுத்த அளவில், அவர் படிக்கும் கருத்துகளோ, கேட்கும் கருத்துகளோ, பார்க்கும் காட்சிகளோ அவை நல்லனவாக இருந்தால் அப்படியே ஈர்த்துக் கொள்ளப் பெறுவதில்லை. நரம்பு நாடிகளுடன் சேர்த்துக் கொள்ளப் பெறுவதும் இல்லை. சான்றாக, இவர்கள் மகாபாரதம், இராமாயணம், அரிச்சந்திர புராணம் ஆகியவற்றை நாடகங்களாகப் பார்க்கிறார்கள். எம்.ஜி.ஆர்., முதலானோர் நடித்த திரைப்படங்களைப் பார்க்கிறார்கள். திரும்பத் திரும்பப் பார்க்கிறார்கள். பார்த்து இரசிக்கிறார்கள். எம்.ஜி.ஆர். போல நல்லவராகவும், நல்லவற்றுக்காகப் போராடுபவராகவும், போராடிச் சாதிப்பவராகவும் படம் பார்க்கும் இரசிகர் பரிணமிப்பது இல்லை. அவற்றை இரசிக்கும் அளவோடு நிறுத்திக் கொள்கிறார்கள். இரசித்தல் வேறு, கற்றல் வேறு, பின்பற்றல் வேறு. தமிழர்கள் முதல் நிலையிலேயே நின்று விடுகிறார்கள்.

ஒழுங்கற்ற சமுதாயப் போக்கு: பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் படித்துக் கொண்டிருப்போரும், படித்து முடித்தோரும் கூடத் தாம் கல்விக் காலத்தில் நல்ல நூல்களில் படித்தபடியோ, நல்ல ஆசிரியர்கள் சொன்னபடியோ நடப்பதில்லை. இவர்கள் படித்த / கேட்ட அற உரைகளுக்கும், அறிவுரைகளுக்கும் நேர் முரணாக இவர்கள் வாழும் காலத்து அரசியலும், சமூகமும் இருக்கின்றன. இவர்கள் உண்மை வெல்லும் என்று படித்திருந்தால், இவர்கள் கால அரசியலிலும், சமுதாயத்திலும் பொய் வெல்வதை நேரில் பார்க்கிறார்கள். விளைவாக, தாம் படித்தறிந்த / செவி வழி மடுத்து அறிந்த நல்ல கருத்துகளைப் பின்பற்றாமல் புறக்கணிக்கும் சூழலுக்குத் தள்ளப்படுகிறார்கள்.

இந்நான்கு குறைகளையும் போக்க நடவடிக்கை எடுத்தால்தான் நம் வருங்காலம் வளம் கொழிப்பதாக விளங்கும்.

- நன்றி www . dinamani . com -

<< கரும்பலகை  Contact blogger  Font Help