யோசிக்கப்படாத எண்ணங்கள்

வி.எஸ். ஸ்ரீதரன்

பாவபுண்ணியம் என்பதை அடிக்கடி மக்கள் பேசுவதைக் கேட்கிறோம். புண்ணியம் என்பது நல்ல செயல்கள் அல்லது தரும காரியங்கள் என்ற பொருளில் அறியப்படுகிறது. பாவம் என்றால் பொதுவாக நினைவுக்கு வருவது கொலைகொள்ளைபோன்ற தீய செயல்கள். ஆனால் பாவம் என்பது இதுபோன்ற பெரிய தவறுகளை மட்டும்தான் குறிக்குமா என்று யோசிக்க வேண்டும்.

பலபேர் மேற்கூறியவற்றைச் செய்யாதிருப்பதன் மூலம் தாங்கள் பாவம் எதுவும் செய்யாதவர்கள் என்று நினைத்துக் கொள்கிறார்கள். பாவம் என்பது என்ன என்று வரையறுக்க வேண்டும் என்றால் "மற்ற மனிதர்களுக்கோ உயிர்களுக்கோ எந்த வகையிலாவது தீமை செய்தல்' என்று சொல்லலாம். இந்த இடத்தில் பாவம் என்பதற்கும் பலவீனம் என்பதற்கும் உள்ள வேறுபாட்டை உணர வேண்டும். மது அருந்துதல், புகைபிடித்தல், சூதாட்டம் போன்றவை பலவீனத்தின் காரணமாகத் தோன்றும் கெட்ட பழக்கங்கள். இதுபோன்ற கெட்ட பழக்கங்களின் மூலம் ஒருவன் தனக்குத் தானே கெடுதல் செய்து கொள்கிறான். இவற்றிலிருந்து ஒருவனைக் காப்பாற்றும் எண்ணத்திலேயே நம் முன்னோர்கள்சான்றோர்கள் இவற்றை வன்மையாகக் கண்டித்தனர். சில நேரங்களில் பலவீனங்களே சில பாவங்களைச் செய்யத் தூண்டுதலாகவும் ஆகி விடுகின்றன என்பதும் இவற்றைக் கண்டிக்கக் காரணம்.

குறிப்பிட்ட சில விஷயங்களை மட்டுமே பாவம் என்று கருதி அவற்றைச் செய்யாதவர்கள் தங்களைப் பாவம் செய்யாதவர்கள் என்று நினைக்கிறார்கள் அல்லவா? அது தவறான அபிப்ராயம். ஆனால் இதைப் பெரும்பாலும் பலரும் சிந்திப்பதில்லை. வேறு எத்தனையோ விதங்களில் பாவங்களைச் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். சில உதாரணங்களைப் பார்ப்போம்.

1. தங்களைவிட நிலையில் தாழ்ந்தவர்களை எகத்தாளமாகச் சிலர் பேசுவதுண்டு; அல்லது மனிதத்தன்மை இல்லாமல் நடப்பதுண்டு.
2. மற்றவர்கள் மனம்நோகும்படிச் சிலர் வார்த்தைகளை அள்ளிக் கொட்டுவதுண்டு.
3. ஒருவர் மீதுள்ள வெறுப்பின் காரணமாகவோ, அவசர புத்தியின் காரணமாகவோ அவர்கள் மீது அபாண்டமாகப் பழி போடுவார்கள் சிலர்.
4. நன்றாக இருக்கும் சில உறவுகளைத் தங்கள் துர்புத்தியால் கெடுக்க முயல்வார்கள் சிலர்.
5. ஆராயாமலும் தெளிவு பெறாமலும் மற்றவர்களைப் பற்றிய தவறான கண்ணோட்டத்தை வளர்த்துக் கொண்டு தங்களுக்குள்ளேயே அவர்களை வெறுப்பார்கள் சிலர்.
6. மற்றவர்கள் அழிவைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பார்கள் சிலர்.
7. கெட்ட எண்ணங்களை வளர்த்துக் கொள்வதைப் பழக்கமாக்கிக் கொள்பவர்கள் சிலர்.
8. மற்றவர்களின் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் கெடுக்க முயல்வார்கள் சிலர். இத்தகைய சில உதாரணங்கள் எல்லாம் மனத்தினாலோ அல்லது பேச்சினாலோ பிறரைத் துன்புறுத்துபவை.

இவற்றை எல்லாம் "யோசிக்கப்படாத பாவங்கள்' என்று வகைப்படுத்தலாம். வழக்கமாக அறியப்பட்ட பாவங்கள் அநேகமாக உடலால் செய்யப்படும் வெளிப்புறச் செயல்களைக் குறிப்பவை. அவற்றில் ஈடுபடுவோரை அடையாளம் காண முடியும்; திருத்தவும் முயற்சிக்கலாம். ஆனால் மனத்தளவில் பாவங்கள் செய்பவர்களை எப்படிக் காண்பது? எப்படித் திருத்துவது? இன்னும் சொல்லப்போனால், மனத்தளவில் பாவம் செய்யாமல் இருப்பதை உயர்ந்த நிலை என்று கூறலாம். மனிதன் தன்னுடைய தீயதவறான எண்ணங்களின் மூலம் தன்னைச் சுற்றிக் கெட்ட அதிர்வுகளை ஏற்படுத்துகிறான். எனவே, மனத்தளவில் ஒருவன் தூயவனாக இருப்பது அவசியம்.



யோசனை செய்யாமல் பட்டென்று அபாண்டமாக ஒருவர் மேல் கோள் சொல்வது, பழி கூறுவது, குற்றம் காண்பது போன்றவை எல்லாம் மனத்தின் மூலம் செய்யும் பாவங்களில் அடங்கும். மனத்திற்குள் மற்றவரை அநியாயமாய் சபிப்பவன் தானே சபிக்கப்படுகிறான். மன ஆரோக்கியத்தைக் காப்பவன் உடல் ஆரோக்கியத்தையும் காப்பவன் ஆகிறான்.

"உள்ளத்தால் உள்ளலும் தீதே; பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்'

என்று திருவள்ளுவர் கூறுகிறார். ""பிறன்பொருளை அபகரிப்போம்'' என்று நினைப்பதே தவறு என்கிறார். எனவே, மனத்தளவில் பாவத்தைப் பற்றிய விழிப்புணர்வு இருந்தால், அது உடல் அளவில் செய்யும் பாவத்தைத் தடுக்க உதவும்.

நம் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு இருக்கிறது. "இதில் என்ன தவறு இருக்கிறது?' என்று நினைத்து எதையும் செய்யக் கூடாது. பாவம் என்றால் மிகப்பெரிய தவறுகள் மட்டுமே அந்தப் பட்டியலில் அடங்கும் என்ற எண்ணத்தை விட வேண்டும். குறிப்பாக, மனத்தால் செய்யும் பாவங்களும் நாம் தவிர்க்க வேண்டியவை என்ற உணர்வு வர வேண்டும். அவ்வப்போது யோசிக்கப்படாத பாவங்கள் எவை என்று சிந்தித்து வர வேண்டும்.
- நன்றி www . dinamani . com -

உங்களை மற்றவர்களிடம் ஒப்பிட்டுப் பார்த்து தாழ்மை உணர்ச்சியை வளர்த்துக் கொள்ள வேண்டாம். நீங்கள் நீங்களாகவே இருக்கப் பழகி, உங்களின் முன்னேற்றத்திற்கு அடிகோலுங்கள்.
"உங்களை நீங்களே உயர்த்திக் கொள்ள வேண்டும். உங்கள் செயல்களால் உங்களை தாழ்த்திக் கொள்ளக் கூடாது''
என்கிற கீதை வாக்கியம் இங்கே நினைவுக்கு வருகிறது.

<< கரும்பலகை  Contact blogger  Font Help